சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் இந்த வீரர் தான் - பார்த்தீவ் படேல்

Updated: Mon, May 10 2021 10:55 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் படுமோசமாக சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14ஆவது சீசனின் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளைக் குவித்து, புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கேவின் இந்த வெற்றி பயணத்திற்கு முக்கிய காரணம் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். 

இவர் குறித்துப் பேசிய பார்த்தீவ் படேல்,“சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் யார் என என்னிடம் கேட்டால், மொயீன் அலி தான் எனத் தயங்காமல் சொல்வேன். மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஓபனர்கள் ஃபாஃப் டூ பிளஸி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விட்ட இடத்திலிருந்து மொயீன் அலி ஆட்டத்தை எடுத்துச் சென்றார். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த ஆண்டு பிளே ஆஃப் முன்னேறும் நான்கு அணிகளை முன்கூட்டியே கணித்து வைத்திருந்தார். அதில், சிஎஸ்கே விற்கும் இடம் கொடுத்தேன். காரணம், தோனி மீது இருந்த நம்பிக்கைதான். அவரால் அணியை வலுவாக கட்டமைக்க முடியும் என நினைத்தேன். 14ஆவது சீசனில் சிஎஸ்கே சிறப்பான முறையில் கம்பேக் கொடுத்தது. தோனி அணிக்கு தேவையான மாற்றங்களை நேர்த்தியான முறையில் செய்திருந்தார்.

அதேபோல் சுரேஷ் ரெய்னா தான் எப்போதும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். ஆனால், இந்த சீசனில் மொயீன் அலிக்கு மூன்றாவது இடத்தை ஒதுக்கி, அணியின் பேட்டிங் வரிசையைச் சமநிலை அடைய வைத்தார். இதுதான் தோனி, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கக் கூடியவர். அதனால்தான் தோனியை பெஸ்ட் கேப்டன் என்கிறோம்” எனக் கூறினார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி 7 போட்டிகளில் 3ஆவது இடத்தில் களமிறங்கி 157.25 ஸ்டிரைக் ரேட்டுடன் 206 ரன்கள் குவித்தார். அதேபோல், 5 முக்கிய விக்கெட்களையும் கைப்பற்றிச் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::