ரிஷப் பந்த் கேப்டன்சியை பாராட்டிய கிரேம் ஸ்மித்!

Updated: Sat, Jun 11 2022 14:37 IST
Graeme Smith makes a BIG statement on Rishabh Pant's captaincy, says 'he was very..' (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வில் இருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்திய அணியான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வேளையில் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அவர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார். 

அதனை தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் முதன்முறையாக இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 24 வயதே ஆன இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வழிநடத்தி உள்ள அனுபவம் இருப்பதனாலும், இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படுவதாலும் இம்முறை அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் 211 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்வியினால் அவரது கேப்டன்சி மீது பெரிய விமர்சனம் ஏற்பட்டுள்ளது. அதாவது முக்கிய நேரத்தில் சரியான பவுலர்களை அவர் முறையாக பயன்படுத்தவில்லை என்றும் ஏகப்பட்ட முடிவுகளில் அவர் குழப்பத்தை ஏற்படுத்தியதாலும் இந்த தோல்வி கிடைத்தது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் ரிஷப் பந்தின் கேப்டன்சி குறித்து விமர்சித்து வருகின்றனர். அதேபோன்று ரிஷப் பந்தின் கேப்டன்சி சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வளவு சிறப்பாக அமையாது என்றும் பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ரிஷப் பந்த் கேப்டன்சி குறித்து ஆதரவு தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அவரின் கேப்டன்சி குறித்து பாராட்டி பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “பந்த் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் செய்த தவறு குறித்து பலரும் பல விதமாக பேசி வருகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை எந்த வித தவறும் அவர் செய்யவில்லை. சாஹலுக்கு இரண்டு ஓவர்களை மட்டுமே முதலில் வழங்கி இருந்தாலும் போட்டியின் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் சரியான வீரர்களையே பந்துவீச வைத்ததாக நினைக்கிறேன்.

ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் சிக்கிய போது ஹர்ஷல் படேல் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற முக்கிய பவுலர்களை பந்துவீச வைத்தார். இப்படி பந்துவீச வைக்கும் பட்சத்தில் அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த சூழ்நிலையில் பவுலர்களிடம் இருந்து நல்ல முடிவுகள் கிடைக்கவில்லை. இந்திய அணியில் நல்ல பவுலர்கள் இருந்தாலும் சரியான முடிவுகள் இந்த போட்டியில் கிடைக்காததால் அவரது கேப்டன்சி குறித்து அனைவரும் குறை கூறுகின்றனர்.

ஆனால் இந்திய அணி இதே போன்று அனைத்து போட்டிகளையும் தோற்று விடாது. எனவே நிச்சயம் ரிஷப் பந்த்-இன் கேப்டன்சி மீது எந்தவித தவறும் இல்லை. இனி வரும் போட்டிகளில் அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருவார்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை