இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு தர வேண்டும் - கிரேம் ஸ்வான்

Updated: Wed, Jun 29 2022 13:56 IST
Graeme Swann Wants This India Leg Spinner In Test Squad (Image Source: Google)

நவீன மார்டன் டே கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதால் டெஸ்ட் போட்டிகளின் மீதான சுவாரஸ்யம் ரசிகர்கள் மத்தியில் குறையத் தொடங்கிய வேளையில் மீண்டும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தி டெஸ்ட் போட்டியின் மீதான ரசிகர்களின் மோகத்தை மீண்டும் அதிகரிக்கும் விதமாக தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தி வருகிறது. என்ன தான் டி20 ஒருநாள் கிரிக்கெட் இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு வீரருடைய உண்மையான திறமை வெளிவரும் என்பது நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் இந்திய அணிக்காக பல வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் திறமையான சில வீரர்களுக்கு இதுவரை டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அந்த வகையில் 31 வயதான யுஸ்வேந்திர சாஹலுக்கு இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்ததில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 61 ஒருநாள் போட்டிகள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் அவர் கூறி இருந்த வேளையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் நிச்சயம் யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாஹலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விருப்பம் என்றால் நானாக இருந்தால் உடனடியாக சேர்த்துக் கொள்வேன். மேலும் அவருடன் அமர்ந்து இதுகுறித்து கேட்கவும் விருப்பப்படுகிறேன்.

ஏனென்றால் சாஹல் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். தற்போதுள்ள ஸ்பின்னர்களில் மிகச் சிறப்பான ஸ்பின்னர் அவரே என்று நான் கருதுகிறேன். பனி மற்றும் ஈரப்பதம் இருக்கும்போதும் கூட அவர் சிறப்பாக செயல்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரே சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

டெஸ்ட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாகவும், சிறப்பாகவும் இருந்து வருவதால் மீண்டும் அதன் மீது ஆர்வம் துவங்கி வருகிறது. இந்நிலையில் சாஹல் போன்ற திறமையான வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பினால் பார்வையாளர்களுக்கும் அது பரவசமாக அமைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை