WPL 2025: யுபி வாரியர்ஸ் வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரன் நவ்கிரே மற்றும் விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய கிரன் நவ்கிரே 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடகக் வீராங்கனையான விருந்தா தினேஷும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த உமா சேத்ரி மற்றும் கேப்டன் தீப்தி சர்மா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உமா சேத்ரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் தஹ்லியா மெக்ராத் ரன்கள் ஏதுமின்றியும், கிரேஸ் ஹாரிஸ் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தீப்தி ஷர்மாவும் 39 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஸ்வேதா செஹ்ராவத் 18 ரன்களிலும், சோஃபி எக்லெஸ்டோன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய அலானா கிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடியா சைமா தாக்கூர் மூன்று பவுண்டரிகளுடன் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைக் குவித்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் மற்றும் டியாண்டிரா டோட்டின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை பெத் மூனி மற்றும் ஹெமலாதா ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், லாரா வோல்வார்ட் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் இப்போட்டியிலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த ஆஷ்லே கார்ட்னர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் மற்றும் டியாண்டிரா டோட்டின் இணை பொறுப்பை உணர்ந்து விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டியாண்டிரா டோட்டின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும், ஹர்லீன் தியோல் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.