ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிரியா மிஸ்ரா - வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியில் கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்களையும், உமா சேத்ரி 24 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.
குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், டியாண்டிரா டோட்டின், ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் பெத் மூனி, ஹேமலதா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, நட்சத்திர வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் 22 ரன்களையும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டியாண்டிரா டோட்டின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும், ஹர்லீன் தியோல் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரியா மிஸ்ரா 4 ஓவர்களில் 25 ரன்களைக் கொடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக வாரியர்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் தஹ்லியா மெக்ராத் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை தனது ஒரே ஓவரில் வீழ்த்தினார். இந்நிலையில் பிரியா மிஸ்ரா விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.