கேகேஆரும் எனது குடும்பம் போன்று தான் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீடை நடத்தின. இப்போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நான்காவது முறையாக ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியானது , கேகேஆர் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் அடித்தார். கேகேஆர் அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கேப்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெறும் 13.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களும் விளாசினர்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய கேகேஆர் அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், “என்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதன் காரணமாக நான் தொடரின் பாதியிலேயே ஆஃப்கானிஸ்தான் சென்றேன். ஆனால் நாங்கு அங்கு இருந்த சமயத்தில் பில் சால்ட் அணியிலிருந்து வெளியேறிவிட்டதாக கேகேஆர் அணியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் என்னிடம், 'குர்பாஸ், எங்களுக்கு நீங்கள் தேவை. உங்க நிலைமை என்ன?' என கேட்டனர்.
அவர்கள் கேட்டதும் நான் ஐபிஎல் தொடரில் விளையாட வருகிறேன் என்று கூறினேன். என் அம்மா இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நான் ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறேன். ஆனால் கேகேஆரும் எனது குடும்பம் போன்று தான். அவர்களுக்கு நான் இங்கு தேவைப்பட்டேன், எனவே நான் ஆஃப்கானிஸ்தானில் இருந்து திரும்பி வந்தேன். இது கடினமானது என்றாலும், நான் அதனை சமாளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.