லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!

Updated: Fri, Aug 30 2024 20:30 IST
Image Source: Google

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியானது ஜோ ரூட்டின் சதத்தின் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 358 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்திருந்தார். 

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் 20 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி மிரட்டினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 427 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் கஸ் அட்கின்ச இங்கிலாந்து அணிக்காக சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் 8ஆவது வரிசையில் களமிறங்கிய அட்கின்சன் டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்திருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியின் மூலம் தனது முதல் முதல்தர சதத்தை பதிவுசெய்த ஐந்தாவது வீர எனும் பெருமையை அட்கின்சன் படைத்துள்ளார்.

இதற்கு முன் ஹென்றி வுட் (1892), பில்லி கிரிஃபித் (1948), ஜேக் ரஸல் (1989), ஸ்டூவர்ட் பிராட் (2010) ஆகியோர் மட்டுமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் மூலம் தங்களது முதல்தர சதத்தைப் பதிவுசெய்ததுடன், இந்த தனித்துவமான சாதனையைச் செய்துள்ளனர். மேற்கொண்டு புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 8ஆவது இடத்தில் பேட்டிங் செய்து சதமடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையையும் அட்கின்சன் பெற்றுள்ளார். 

இதற்கு முன் இங்கிலாந்து அணிக்காக கடந்த 1969ஆம் ஆண்டு ரே இல்லிங்வொர்த் எட்டாம் வரிசையில் களமிறங்கி சதமடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 8ஆவது அல்லது அதற்கு குறைவான இடத்தில் களமிறங்கி சதமடித்த வீரர்கள் பட்டியலிலும் கஸ் அட்கின்சன் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் (169), குப்பி ஆலன் (122), வெஸ்ட் இண்டிஸின் பெர்னார்ட் ஜூலியன் (121), இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் (118)*, ரே இல்லிங்வொர்த் (113) மற்றும் இந்திய அணியின் அஜித் அகர்கர் (109) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதனையடுத்து சதமடித்து அசத்திய கஸ் அட்கின்சனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை