நான் விளையாடும் போது விராட் கோலி இருந்திருந்தால் இவ்வளவு சதம் அடிக்க விட்டுருக்க மாட்டேன் - சோயப் அக்தர்!

Updated: Mon, Apr 18 2022 20:04 IST
'Had I played against him he wouldn't have scored so many runs and have 50 tons': Akhtar on Kohli
Image Source: Google

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் மற்றும் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அதிரடி நிறைந்த அசுர வேக பந்துகளால் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட் போன்ற உலகின் எத்தனையோ பேட்ஸ்மேன்களை தனது அதிவேகமான பந்துகளால் திணறடித்தவர். 

உலக கிரிக்கெட் வரலாற்றில் கிளன் மெக்ராத், பிரெட் லீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவராக கருதப்படுகிறார். அதிலும் கடந்த 2003 உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிலோமீட்டர் வேக பந்தை வீசிய அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய பவுலர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

இதனால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் வீசிய வேகத்திற்கு ஈடாக நிகழ்காலத்தில் இருக்கும் பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற பவுலர்களால் வீச முடிவதில்லை. அதன் காரணமாகவே தற்போதைய கிரிக்கெட்டில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் என கருதப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களுக்கு அவரைப் போன்ற ஒரு அசுர வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இந்நிலையில் தனது காலத்தில் விராட் கோலி விளையாடிக் இருந்தால் இந்த அளவுக்கு ரன்களையும் சதங்களையும் அடித்திருக்க மாட்டார் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி பேசிய அவர் “விராட் கோலி ஒரு நல்ல மனிதர். மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால் எனது காலத்தில் அவருக்கு எதிராக நான் பந்துவீசி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவரால் இந்த அளவுக்கு ரன்களை எடுத்திருக்க முடியாது.

இருப்பினும் எது எப்படி இருந்தாலும் இதுநாள் வரை அவர் செய்துள்ள சாதனைகள் அபாரமானது. அவர் எடுத்துள்ள ரன்களுக்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளார். எனது காலத்தில் அவர் விளையாடி இருந்தால் 50 சதங்களை அடித்திருக்க முடியாது. 20 – 25 சதங்களை மட்டுமே அடித்திருக்க முடியும் என்றாலும் அது அனைத்தும் தரமானதாக இருந்திருக்கும். அதே சமயம் அவரின் உள்ளே இருந்த மிகச்சிறந்த திறமையை என்னால் வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை