பரத்திற்கு பதில் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டி.20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளுக்கு, டெஸ்ட் சாம்பியன்சிப் கோப்பையையும் சளைத்தது இல்லை என்பதால், ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து தன்னுடைய கருத்துக்களை செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக ஆக்டிவாக தெரியப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன்சிங்., டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் கே எஸ் பரத்திற்கு பதில் இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை நியமிக்கலாம் என இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் தெரிவிக்கையில்,“கேஎஸ் பரத் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என நான் நம்பவில்லை, தற்பொழுது பரத் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் விருதிமான் சஹா விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவரை ஆடும் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக சேர்க்க வேண்டும் என நான் கூறுவேன்.
ஏனென்றால் அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், மேலும் அவருக்கு பரத்தை விட அதிக அனுபவம் உள்ளது. ஒருவேளை கே.எல். ராகுல் காயத்திலிருந்து குணமாகி உடல் தகுதியுடன் இருந்தால் அவரை கே.எஸ் பரத்திற்கு பதில் அணியில் விளையாட வைக்கலாம் அதுவே சரியானதாக இருக்கும்” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.