சூர்யகுமார் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்!

Updated: Tue, Sep 26 2023 14:40 IST
Image Source: Google

இந்திய அணிக்கு எப்பொழுதுமே இருந்திருக்காத வகையில் பினிஷர் இடத்தில் மகேந்திர சிங் தோனி மிகச் சிறப்பாக இருந்தார். மேலும் இன்று வரை உலகில் மிகச்சிறந்த பினிஷர் ஆக அவர்தான் பார்க்கவும் படுகிறார். இப்படிப்பட்ட ஒருவர் அந்த இடத்தை விட்டு விலகும் பொழுது, அந்த இடத்திற்கான சரியான வீரர் கிடைப்பது, அவ்வளவு எளிதாக இந்திய அணி நிர்வாகத்திற்கு அமையவில்லை.

எனவே இந்திய அணி ஏற்கனவே நான்காவது இடத்தில் பேட்டிங்கில் இருந்த பிரச்சனையை சரி செய்து கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆட்டம் செல்கின்ற போக்கில் யாராவது ஃபினிஷர்களாக மாறிக்கொள்ள, அந்தந்த ஆட்டத்தில் மட்டுமே பார்க்கப்பட்டது. தற்போது வரை அந்த நிலைதான் நீடித்து வருகிறது என்று கூட கூறலாம்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து அணியில் தக்க வைத்து வந்தது. இதற்குக் காரணம் அவரை பினிஷர் ரோலில் பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிடுகிறது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்து வருபவராகவே இருந்திருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த இரண்டு போட்டிகளில் அவர் ஒரு பினிஷராக மிகச்சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் 49 பந்துகளில் 50 ரன்கள் சேசிங்கில் எடுத்த அவர், இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பொழுது, 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து, மிகச் சிறப்பாக இன்னிங்ஸை பினிஷ் செய்து கொடுத்தார். இதன் காரணமாக தற்பொழுது இந்திய அணிக்குள் ஆறாவது பந்துவீச்சாளரின் இடத்தில் சூர்ய குமாரை ஆட வைக்கலாம், இல்லை இஷான் கிசானுக்கு தரப்படும் வாய்ப்பை சூர்யகுமாருக்குத் தரப்படலாம் என்கின்ற பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில் சூரியகுமார் பற்றி பேசி உள்ள ஹர்பஜன் சிங் “சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவருக்காக யாரை மாற்றுவது? என்பது பற்றி எனக்கு கவலையே கிடையாது. ஆனால் அவரது பெயர் முதல் இடத்தில் இருக்க வேண்டும். உங்களிடம் பக்காவான ஒரு மேட்ச் வின்னர் மற்றும் ஒற்றைக் கையால் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர் இருக்கிறார். அவர் இந்திய அணியின் பக்கத்தில் ஒரு துருப்புச் சீட்டு. நாங்கள் ஒரு பினிஷரை கொண்டு வருகிறோம். இந்தியாவுக்காக அவர் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை