கோலி - கம்பீரிடையே முன்பிருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கை கொடுத்துக் கொண்டபோது ஆர்சிபி வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு அணிகளை சேர்ந்த மற்ற வீரர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. மேலும் இச்சம்பவம் இணையத்தில் பேசும்பொருளானது. இருவருக்கும் ஐபிஎல் நிர்வாகம் அபராதமும் விதித்தது.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “2008-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்ரீசாந்த்தை அறைந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். விராட் கோலி ஓரு லெஜண்ட். அவர் இம்மாதிரியான செய்களில் ஈடுபடக் கூடாது. விராட் கோலி - கம்பீருக்கு இடையே நடந்தது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
நேற்று நடந்த ஆர்சிபி - லக்னோ போட்டியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அதில் கிரிக்கெட்டை விட சண்டைதான் அதிகம் என்று சொல்வீர்கள். கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு முன்பிருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன. சின்னசாமி மைதானத்தில் (2013-ஆம் ஆண்டு) கோலி - கம்பீர் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர்களது உறவில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை” என்று ஹர்பஜன் கூறினார்.