சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனைய்டுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டும் என்பது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் ஓராண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய இத்தொடருக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பது காணொளியாக உள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பந்த் இவர்கள் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் எனக் கூறுவேன். ஏனென்றால், அவர் தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக விளையாடிய போட்டியில் சதமடித்து அசத்தி இருந்தார். மேற்கொண்டு தற்போது அவர் மிகவும் நன்றாக விளையாடி வருகிறார்.
ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடினார். ஆனால், அது மிகவும் நீண்ட தொடர். அதனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரிஷப் பந்த்துக்கு ஓய்வளிப்பது பெரிய விஷயமாக இருக்காது” என்று கூறியுள்ளார். மேற்கொண்டு இங்கு அவர் அணியில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல், அவர் தனது தவறவிட்ட வீரர்கள் பட்டியலிலும் கேஎல் ராகுலின் பெயரைக் கூட சேர்க்கவில்லை. இது தவிர, ரவீந்திர ஜடேஜாவையும் அவர் தேர்வுசெய்யவில்லை. மாறாக அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டி, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் திலக் வர்மா ஆகியோரை தனது அணியில் இடமளித்துள்ளார். அதேசமயம் ரியான் பராக், சாய் சுதர்சன், ரஜத் படிதர், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரையும் அவர் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி, ஷுப்மான் கில், யுஸ்வேந்திர சாஹல்.