சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

Advertisement

முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடுவரிசை பேட்டர்களான சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரிடையே போட்டி இருந்தது. இருப்பினும் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Advertisement

இந்நிலையில், தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “சூர்யகுமார் யாதவ் முழுமையான வீரர் என நான் கருதுகிறேன். தேர்வுக்குழு சஞ்சு சாம்சன் மீது கடுமையாக நடந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. சஞ்சு மிகச் சிறந்த மற்றும் தரமான வீரர். ஆனால் நீங்கள் 15 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் சஞ்சுவை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு.

ஏனென்றால் நடு ஓவர்களில் சூர்யகுமாரிடம் உள்ள ஆட்டம் சஞ்சுவிடம் இல்லை என்று நினைக்கிறேன். முதல் பந்திலேயே சஞ்சு பெரிய ஷாட்களை அடிக்கிறார். ஆனால் சூர்யகுமார் தன்னால் அதிக ரன்களைக் குவிக்க முடியும் என்ற நம்பகத்தன்மையை அளிக்கிறார். மாறாக சஞ்சு ஆட்டமிழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள கிரிக்கெட்டை விளையாடுவதாக உணர்கிறேன்.

அதேசமயம் சூர்யகுமார், ஒருநாள் போட்டிகளில் என்ன செய்தார் என்று நிறைய பேர் கேட்பது எனக்குத் தெரியும். ஆனால் டி20 போட்டிகளில் அவர் என்ன செய்தார் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். டி20ஐ போல ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடினால் அந்த இடத்திற்கு சூர்யகுமாரை விட சிறந்த வீரர் இந்தியாவில் இல்லை என்றே கூறுவேன். நடுவரிசையில் அவரைப்போல விளையாட கோலி, சஞ்சு அல்லது ரோஹித் சர்மா ஆகியோரால் முடியாது.

Advertisement

ஏனெனில் அந்த இடத்தில் விளையாடுவது கடினம். 5, 6ஆம் இடங்களில் தோனி மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். நடுவரிசையில் பேட்டிங் செய்வது கடினமான வேலை. ஒரு நாள் போட்டிகளில் தொடக்கத்தில், எங்கு ரன்களை எடுக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். ஆனால் 20-25 ஓவர்களுக்குப் பிறகு நீங்கள் பேட்டிங் செய்யச் செல்லும்போது, பவுண்டரிகளைப் பெறுவதற்கு எந்தத் திசையில் விளையாட வேண்டும் என உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அந்தப் பணியை இந்திய அணியில் சூர்யகுமாரை விட யாராலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நான் நிச்சயம் சூர்யகுமாரை அணியில் விளையாட வைப்பேன். ஏனெனில் அவர் அணியில் இருக்கும்போது அவர் அதிரடியை வெளிப்படுத்துகிறாரோ இல்லையோ எதிரணிக்கு அழுத்தம் அதிகரிக்கும். எந்த ஆட்டத்திலும் அவரால் அணியை வெற்றிபெறச் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News