பவுண்டரி விளாசிய இமாம்; குட்பை சொல்லி வழியனுப்பிய ஹர்திக்; வைரல் காணொளி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இரண்டாவது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு வரும் என்பதால், இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இனையடுத்து பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபீக் - இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அப்துல்லா ஷஃபீக் சிராஜ் பந்துவீச்சில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். ஒரு பக்கம் பாபர் அசாம் நிதானமாக பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் இமாம் உல் ஹக் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
இதன் காரணமாக 12 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் எடுத்திருந்தது. தொடர்ந்து 13ஆவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் இமாம் உல் ஹக் அபாரமாக ஒரு பவுண்டரியை விளாசினார். இதனால் கோபமடைந்த ஹர்திக் பாண்டியா, அடுத்த பந்தை கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் வீச, இமாம் உல் ஹக் பேட்டில் பட்டு பந்து கேஎல் ராகுல் கைகளில் தஞ்சம் புகுந்தது.
அப்போது 36 ரன்களில் வெளியேறிய இமாம் உல் ஹக்கை பார்த்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா "குட் பை" சொல்லி வழியனுப்பி வைத்தார். பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்தியது, 1996ஆம் உலகக்கோப்பையில் ஆமிர் சொஹைலை வெங்கடேஷ் பிரசாத் வீழ்த்திய சம்பவத்தை நினைவுபடுத்தியுள்ளது.
1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வெங்கடேஷ் பிரசாத் பந்துவீச்சில் ஆமிர் சோஹைல் இறங்கி வைத்து பவுண்டரியை விளாசி, அந்த பவுண்டரியை பார் என்று வெங்கடேஷ் பிரசாத்தை வம்புக்கு இழுப்பார். ஆனால் அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் பிரசாத் அவரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 27 ஆண்டுகளுக்கு பின் இமாம் உல் ஹக்கை அதேபோல் ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், குட் பை சொல்லி வழியனுப்பி வைத்துள்ளார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.