சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!

Updated: Sat, Feb 01 2025 11:18 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது.

ஒருகட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமயத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடியதுடன் 27 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

விராட் கோலியின் சாதனை முறியடிப்பு

அதன்படி 16ஆவது மற்றும் 20ஆவது ஓவர்களுக்கு இடையில் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார். அவர் இப்போது 174.23 ஸ்ட்ரைக் ரேட்டில் 1068 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் அவர் விராட் கோலியை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக விராட் கோலி 192.54 ஸ்ட்ரைக் ரேட்டில் 1032 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் பட்டியலில் எம்எஸ் தோனி 1014 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இந்திய வீரர் 

மேற்கொண்டு இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5ஆவது, 6ஆவது மற்றும் 7ஆவது இடங்களில் பேட்டிங் செய்து ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹார்திக்  பாண்டியா படைத்துள்ளார். மேற்கொண்டு 7ஆவது இடத்தில் அரைசதம் கடந்து இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக அக்ஸர் படேல் மட்டுமே 7ஆவது இடத்தில் பேட்டிங் செய்து அரைசதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷிகர் தவானை பின்னுக்குத் தள்ளிய ஹர்திக் பாண்டியா

இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஹார்திக் பாண்டியா தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இப்போது 113 போட்டிகளில் 89 இன்னிங்ஸ்களில் 1803 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 68 போட்டிகளில் 1759 ரன்கள் எடுத்து 5ஆம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது அவரை ஹர்திக் பாண்டியா பின்னுக்கு தள்ளியுள்ளார். இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இப்போட்டியை வென்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை