எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!

Updated: Sun, Jan 08 2023 22:39 IST
Hardik Pandya credits Ashish Nehra for making ‘big difference’ in his captaincy (Image Source: Google)

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என கடந்த ஆண்டு அடுத்தடுத்து 2 பெரிய ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோற்று ஏமாற்றமளித்த நிலையில், 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்து ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாண்டு டி20 உலக கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் வலுவான அணி கட்டமைக்கப்பட்டுவருகிறது.
 
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்யும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 15ஆவது சீசனில் தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்தார். ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக இருந்து சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். 
 
ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாக அவரது அணியை முன்னின்று வழிநடத்திய விதம், பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தையும் கவர்ந்தது. அதன்விளைவாக, கேஎல் ராகுலை ஓரங்கட்டி இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான இடத்தை வலுவாக பிடித்தார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு 2-1 என அந்த தொடரை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா தான், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தனது கேப்டன்சி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “நான் ஜூனியர் கிரிக்கெட்டில் கூட கேப்டனாக செயல்பட்டதில்லை. அண்டர் 16 பரோடா அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறேன். அதன்பின்னர்  எனது கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு அனைவரும் அறிவுறுத்தியதால் நான் எந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டதில்லை. 

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுடன் பணியாற்றியதுதான். ஆஷிஷ் நெஹ்ரா தான் ஒரு கேப்டனாக எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு விதமான கேரக்டர்கள். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் இருவரது நோக்கமும் சிந்தனையும் ஒன்றுதான். அவருடன் இணைந்து செயல்பட்டதுதான் எனது கேப்டன்சி மதிப்பை அதிகப்படுத்தியது. அவர் எனக்கு பெரியளவில் உதவினார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை