IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!

Updated: Fri, Oct 11 2024 09:43 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய இந்திய அணியானது, டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை மறுநாள் (அக்.12) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தும். அதேசமயம் கடைசி டி20 போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் வங்கதேச அணி விளையாடவுள்ளது. 

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், அவர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெறுவார்.

இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா இதுவரை 92 இன்னிங்ஸ்களில் விளையாடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் புவனேஷ்வர் குமார் 86 இன்னிங்ஸில் 90 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 69 இன்னிங்ஸில் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் 24 ரன்களை எடுக்கும் பட்சத்தில், எம் எஸ் தோனி, சுரெஷ் ரெய்னா ஆகியோரைப் பின்னுக்கு தள்ளி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்களைச் சேர்த்த 6ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதுவரை ஹர்திக் பாண்டியா 104 போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,594 ரன்களை எடுத்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் பேட்ஸ்மேன் எம் எஸ் தோனி 98 போட்டிகளில் 85 இன்னிங்ஸ்களில் 1,617 ரன்களும், ரெய்னா 78 போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் 1,605 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை