ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. சில வாரங்கள் முன்பு தான் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றம் செய்து இருந்தது. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கி இருக்கும் நிலையில் அவர் அணியில் ஒரு வீரராக இடம் பெறுவாரா? அல்லது ஓரங்கட்டப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார்.
அங்கே அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச் சென்றார். இந்த நிலையில், அவருக்கு குஜராத் அணியுடன் கருத்து வேறுபாடு எழுந்ததால் ஐபிஎல் நேரடி விற்பனை மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவினார்.
ஹர்தின் பாண்டியா மும்பை அணிக்கு மீண்டும் வந்த போதே குஜராத் அணியில் கேட்பனாக இருந்த பாண்டியா நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை உறுதி செய்த பின்னரே அணி மாறி இருப்பார் என கூறப்பட்டது. அதே போல, தற்போது மும்பை அணி கேப்டனாக அறிவித்து இருக்கிறது. ஆனால், ரோஹித் சர்மா அணியில் முக்கிய வீரராக இருப்பாரா? என்பது குறித்து எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
இந்த விளக்கம் மூலம் ரோஹித் சர்மாவை கை கழுவ மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. அவருக்கு 36 வயதாகும் நிலையில், ஐபிஎல் எதிர்காலம் சரிவை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.