ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை கடுமையாக சாடிய இர்ஃபான் பதான்!

Updated: Mon, Apr 15 2024 15:25 IST
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை கடுமையாக சாடிய இர்ஃபான் பதான்! (Image Source: Google)

இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முதலே மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும் நீடித்தன. அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கியதோடு, குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது அந்த அணியில் உள்ள ஒருசில வீரர்கள் உள்பட ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்தது. 

இதனால் ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு முறையும் களத்தில் டாஸ் நிகழ்விற்காக வரும் போது சொந்த அணி ரசிகர்களே கேலி செய்ததும் நடந்தது. போதாக்குறைக்கு அந்த அணி இந்த சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திதது. அதன்பின் கடந்த இரண்டு போட்டிகளாக அணியில் உள்ள ஒருசில பிரச்சனைகள் முடிவுக்கு வந்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தது. 

இந்நிலையில் தற்போது கேப்டனாக ஹர்திக் பாண்டியா எடுத்த சில முடிவுகள் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது. குறிப்பாக இன்னிங்ஸின் 20ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா சிறப்பாக தொடங்கினாலும், கடைசி நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் உள்பட 20 ரன்களை வாரி வழங்கினார். இப்போட்டியில் சிஎஸ்கே அணியும் 20 ரன்கள் வித்தியாசத்திலேயே மும்பை அணியை வீழ்த்தியது. 

இதனால் ஹர்திக் பாண்டியா கொடுத்த அந்த 20 ரன்கள் தான் மும்பை இந்தியன்ஸின் தோல்விக்கு முக்கிய காரணம் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதானும், மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படும் விதம் அவருக்கே பெரும் நெருக்கடியை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து பேசிய அவர்,  “மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த முடியும். அவர்களின் கேப்டன் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இன்று ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார், ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்க செய்தும், ஷிவம் தூபே பேட்டிங் செய்யும் போது ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி உள்ளது. 

அதன்பின் அவரது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முன்வந்து, தனது முதல் ஓவரிலேயே15 ரன்கள் கொடுத்தார். பிறகு கடைசி ஓவரை வீசும் முறை வந்ததும் அவரே பந்து வீச வந்தார். அவர் ஆகாஷ் மத்வாலுக்கு பந்து வீச ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அவர் பந்துவீசி இருந்தால் கூடுதலாக 20 ரன்கள் வராமல் இருக்கலாம்” என்று விமர்சித்துள்ளார். 

 

இதுமட்டுமின்றி, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியையும் இர்ஃபான் பதான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் செய்து விமர்சித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியா தனது சொந்த பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலை நம்பவில்லை என்று அவர் தெளிவாக எழுதியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா மத்வாலை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மத்வால் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை