யாஷ் தயாளுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? - ஹர்திக் பாண்டியா பதில்!  

Updated: Wed, Apr 26 2023 14:43 IST
Image Source: Google

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு விக்கெட்டுகள் வரிசையாக சென்று கொண்டே இருந்தாலும், உள்ளே வந்த வீரர்கள் பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை கொடுத்து வந்தனர்.

20ஆவது ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. இந்த கடைசி ஓவரை யாஷ் தயாள் வீசினார். யார் இந்த ஓவரை வீசினாலும் 29 ரன்கள் அடிப்பது கடினம் என்ற கருத்து பரவலாக நிலவி வந்தபோது, உள்ளே நின்ற ரிங்கு சிங் அடுத்தடுத்து ஐந்து சிக்ஸர்களை அடித்து அசாத்திய வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

20ஆவது ஓவரில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்த விரக்தியில் இருந்த யாஷ் தயாள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு எடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் குஜராத் அணிக்கு பல போட்டிகளில் நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்த அவரை ஏன் ஒரு போட்டியிலேயே வெளியில் நிறுத்தி விட்டார்கள்? வீரர்கள் மீது வைத்த நம்பிக்கை இவ்வளவுதானா? என்கிற விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா பேசுகையில், “யாஷ் தயாள் எங்களுக்கு முன்னணி பந்துவீச்சாளர். அவருக்கு கடந்த 10 நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 8 முதல் 9 கிலோ வரை உடல் எடை குறைந்து இருக்கிறது. 

இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அணியின் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து பரிசோதனை கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு சூழலில், அவரை எப்படி விளையாட வைக்க முடியும். வெறுமனே 31 ரன்கள் விட்டுக் கொடுத்ததற்காக வெளியில் அமர்த்தப்படவில்லை. விரைவாக குணமடைந்து வரும் பட்சத்தில் மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்புகள் உண்டு” என்று பேசினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை