PSL 2023: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Fri, Mar 03 2023 09:59 IST
Image Source: Google

பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில் நட்சத்திர வீரர்களான ஃபகர் ஸமான் 4, மிர்ஸா தாஹிர் 2, அப்துல்லா ஷஃபிக் 15, சாம் பில்லிங்ஸ் 2, ஹுசைன் தாலத் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 50 ரன்களுக்கே லாகூர் கலந்தர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதையடுத்து ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா - ரஷித் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களை பார்ட்னர்ஷிப்பையும் அமைத்துக்கொடுத்தனர். பின் 21 ரன்களில் ரஷித் கான் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சிக்கந்தர் ரஸா 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா 33 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்க் என 71 ரன்களைச் சேர்த்தார். குயிட்டா கிளாடியேட்டர்ஸ் தரப்பில் நவின் உல் ஹக், முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு யாசிர் கான் - வில் ஸ்மீட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் யாசிர் கான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த  மார்ட்டின் கப்திலும் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஸ்மீட் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து வந்த முகமது ஹபீஸ் 2, இஃப்திகார் அகமது 3, ஓடிய ஸ்மித் 11 என ஆட்டமிழக்க, கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 27 ரன்களை எடுத்திருந்தார். ஆனாலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

லாகூர் கலந்தர்ஸ் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை