டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 80 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணியில் ஷஃபாலி வர்மா 43 ரன்களையும், அறிமுக வீராங்கனை நிக்கி பிரசாத் 35 ரன்களையும், ராதா யாதவ் 9 ரன்களையும், கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான இரண்டு ரன்களை அருந்ததி ரெட்டியும் சேர்த்தனர்.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. தனது அறிமுக ஆட்டத்திலேயே ஆபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிக்கி பிரசாத் ஆட்டநாயகி விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டில் மும்பை அணி தோல்வியடைந்தாலும், அந்த அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் அவர் 42 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார். அவருக்கு முன் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா முதல் வீராங்கனையாக 8ஆயிரம் ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீராங்கனைகள்
- 8349 - ஸ்மிருதி மந்தனா
- 8005 - ஹர்மன்ப்ரீத் கவுர்
- 5826 - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
- 4542 - ஷஃபாலி வர்மா
- 4329 - மிதாலி ராஜ்
- 3889 - தீப்தி சர்மா
இதுதவிர்த்து உலகளவில் இந்த மைல் கல்லை எட்டும் 10ஆவது வீராங்கனை எனும் பெருமையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார். இவருக்கு முன் சூஸி பேட்ஸ், ஷோஃபி டிவைன், பெத் மூனி, மெக் லெனிங், டேனியல் வையட், எல்லிஸ் பேர்ரி, ஹீதர் நைட், ஸ்மிருதி மந்தனா, அலீசா ஹீலி ஆகியோர் மட்டுமே மகளிர் டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள்
- 12770 - சூஸி பேட்ஸ்
- 11700 - சோஃபி டிவைன்
- 10613 - பெத் மூனி
- 9704 - மெக் லானிங்
- 8863 - டேனி வயட்-ஹாட்ஜ்
- 8668 - எலிஸ் பெர்ரி
- 8496 - ஹீதர் நைட்
- 8349 - ஸ்மிருதி மந்தனா
- 8310 - அலிசா ஹீலி
- 8006 - ஹர்மன்ப்ரீத் கவுர்