BANW vs INDW, 1st T20I : ஹர்மன்ப்ரித் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷதி ராணி 22 ரன்களையும், ஷமிமா சுல்தானா 17 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷொபனா மொஸ்டரி 23 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 2 ரன்கள், ரிடு மோனி 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதிவரை களத்தில் இருந்த ஷொர்னா அக்டெர் 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரேகர், மின்னு மணி, ஷஃபாலி வர்மா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் ஸ்மிருதி மந்தனா 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.