USA vs BAN, 1st T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது அமெரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸிஸ் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் வங்கதேச அணியும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹஸ்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமீயா சர்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் 14 ரன்களை எடுத்திருந்த லிட்டன் தாஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சௌமீயா சர்காரும் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 3 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 64 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோய் தனது அரைசதத்தைக் கடந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 5ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மஹ்முதுல்லா 33 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஜகார் அலி தனது பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.
மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருத தாவ்ஹித் ஹிரிடோய் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 58 ரன்களை எடுத்திருந்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்துள்ளது. அமெரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டீவன் டெய்லர் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லார் - கேப்டன் மோனாங்க் படேல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மோனாங்க் படேல் 12 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 23 ரன்களில் ஆண்ட்ரிஸ் கஸ்ஸும் , 28 ரன்களில் ஸ்டீவன் டெய்லரும் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் 4, நிதீஷ் குமார் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அமெரிக்க அணி 94 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கோரி ஆண்டர்சன் மற்றும் ஹர்மீத் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோரி ஆண்டர்சன் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும், ஹர்மீத் சிங் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அமெரிக்க அணி 19.3 ஓவார்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமின்றி வங்கதேச அணிக்கெதிரான தங்களது முதல் போட்டியிலேயே அமெரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.