ஹாரிஸ் ராவுஃப் ஓவரை அடித்து நொருக்கிய வார்னர், மார்ஷ்; வைரல் காணொளி!
உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மிர் சேர்க்கப்பட்டார். இதன் பின் ஆஸ்திரேலிய அணி தரப்பில் வார்னர் - மிட்செல் மார்ஷ் கூட்டணி களமிறங்கியது.
பாகிஸ்தான் அணி தரப்பில் முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஷாகின் அஃப்ரிடி வீசினார். முதல் பந்திலேயே ஷாகின் அஃப்ரிடி வார்னர் கால்களுக்கு வீசினார். அது வார்னரின் பேட்டில் அடித்து கால்களில் பட்டு சென்றது. இதனை அறியாமல் பாகிஸ்தான் அணியும் முதல் பந்திலேயே ரிவ்யூ செய்து ஏமாற்றமடைந்தது. இதனை தொடர்ந்து நிதானம் காட்டிய வார்னர், ஒரு கட்டத்தில் அதிரடிக்கு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து 4ஆவது ஓவரில் ஷாகின் அஃப்ரிடி பந்தில் டேவிட் வார்னர் கொடுத்த கேட்சை பாகிஸ்தான் வீரர் மிர் தவறவிட்டார். இருப்பினும் 6ஆவது ஓவரை சிறப்பாக வீசிய ஷாகின் அஃப்ரிடி ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இதனால் 8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்திருந்தது.
இதன்பின் ஹாரிஸ் ராவுஃப் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட்ட, 2ஆவது பந்தில் சிக்சர் அடித்து டேவிட் வார்னர் வரவேற்றார். இதன்பின் ஹாரிஸ் ராஃப் ஒய்டு வீச, கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷாகின் அஃப்ரிடி இருவரும் அவருக்கு சில அறிவுரை வழங்கினர். குறிப்பாக வேகத்தை குறைக்க வலியுறுத்தப்பட்டதாக வர்ணனையில் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த அறிவுறுத்தல்களை ஏற்காத ஹாரிஸ் ராஃப் மீண்டும் 140 கிமீ வேகத்தில் வீச, அடுத்தடுத்து 3 பந்துகளிலும் 3 பவுண்டரிகளை விளாசினார் மிட்செல் மார்ஷ். இதனால் அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 24 ரன்கள் விளாசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை மொத்தமாக தங்கம் பக்கம் திருப்பவும் ஹாரிஸ் ராவுஃப் ஓவர் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.