அறிமுக போட்டியில் வரலாறு படைத்த ஹர்ஷித் ரானா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (பிப்ரவரி 6) தொடங்கிய. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 43 ரன்களையும், பென் டக்கெட் 33 ரன்களையும் சேர்த்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களிலும், ஜேக்கோப் பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களிலும், அக்ஸர் படேல் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஹர்திக் பாண்டியா 9 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 39.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ரானா சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவங்களிலும் தனது அறிமுக இன்னிங்ஸிலேயே மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஹர்ஷித் படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த நம்பவம் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தனது அறிமுகப் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு, சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி-20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமானபோது, அவர் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தற்சமாயம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து இப்போட்டியில் அவர் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி அறிமுக போட்டியிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் தனது மூன்றாவது ஓவரில் 26 ரன்களைக் கொடுத்ததன் மூலம், அறிமுக போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.