ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை வீழ்த்தியதற்கான ரகசியத்தை உடைத்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்து அசத்தியது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 63, விருத்திமான் சாஹா 25, சாய் சுதர்சன் 22, விஜய் சங்கர் 27 ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இறுதிக் கட்டத்தில் ராகுல் திவேத்தியா 15 , ரஷித் கான் 10 ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் வெற்றியை பெற்றப் பிறகு பேசிய ஹார்திக் பாண்டியா, “கடைசி கட்டத்தில் எங்களுக்கு பெரிய நெருக்கடி இருந்தது. நல்லவேளை ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டனர். சிஎஸ்கே 200 ரன்களை அடிக்கும் நிலை இருந்தபோது, எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி, சிஎஸ்கேவை கட்டுப்படுத்தினார்கள்.
கடினமான லெந்தில் பந்துவீசினால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருதினேன். ஆகையால்தான், அல்ஜாரி ஜோசப்புக்கு கடைசி நேரத்தில், ஓவர்களை வழங்கி சிஎஸ்கேவை நெருக்கடியில் தள்ளினோம். ரஷித் கான் பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அதிரடியாக செயல்பட்டு அசத்தினார். வெற்றிப் பயணத்தை தொடருவோம்” என ஹார்திக் நம்பிக்கை தெரிவித்தார்.