ஷர்துல் தாகூர் ஒன்றும் சிறு குழந்தை இல்லை - ரவி சாஸ்திரி!

Updated: Fri, Dec 29 2023 22:17 IST
ஷர்துல் தாகூர் ஒன்றும் சிறு குழந்தை இல்லை - ரவி சாஸ்திரி! (Image Source: Google)

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்ரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்றது.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி, அடுத்த போட்டிக்கான ஆடும் லெவனில் அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, “முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. பந்துவீச்சில் சொதப்பியதற்கு அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதும் ஒரு காரணமே. பும்ராஹ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அனுபமவிக்க வீரர்களாக இருந்தாலும், முகமது ஷமியும் இருந்திருக்க வேண்டும். 

முகமது ஷமியின் அனுபவத்தை இந்திய அணி மிஸ் செய்தது. அணியில் இடம்பெற்றிருந்த ஷர்துல் தாகூர் சிறு குழந்தை இல்லை என்றாலும், அவர் அதற்கு ஏற்றார் போல் செயல்படவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுத்து பார்க்கலாம் என்பதே எனது கருத்து. 

டெஸ்ட் போட்டிகள் அதிக சவாலானது என்பதால் அவருக்கு இடம் கொடுப்பதற்கு முன்பு அர்ஸ்தீப் சிங், ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை