ஹர்திக்கின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் - கெவின் பீட்டர்சன்!

Updated: Mon, Apr 15 2024 20:28 IST
ஹர்திக்கின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் - கெவின் பீட்டர்சன்! (Image Source: Google)

இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னரே மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும் நீடித்தன. அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கியதோடு, குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது அந்த அணியில் உள்ள ஒருசில வீரர்கள் உள்பட ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்தது. 

இதனால் ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு முறையும் களத்தில் டாஸ் நிகழ்விற்காக வரும் போது சொந்த அணி ரசிகர்களே கேலி செய்ததும் நடந்தது. போதாக்குறைக்கு அந்த அணி இந்த சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திதது. அதன்பின் கடந்த இரண்டு போட்டிகளாக அணியில் உள்ள ஒருசில பிரச்சனைகள் முடிவுக்கு வந்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தது. 

இந்நிலையில் தற்போது கேப்டனாக ஹர்திக் பாண்டியா எடுத்த சில முடிவுகள் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது. குறிப்பாக இன்னிங்ஸின் 20ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா சிறப்பாக தொடங்கினாலும், கடைசி நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் உள்பட 20 ரன்களை வாரி வழங்கினார். இப்போட்டியில் சிஎஸ்கே அணியும் 20 ரன்கள் வித்தியாசத்திலேயே மும்பை அணியை வீழ்த்தியது. 

இதனால் ஹர்திக் பாண்டியா கொடுத்த அந்த 20 ரன்கள் தான் மும்பை இந்தியன்ஸின் தோல்விக்கு முக்கிய காரணம் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிஅலியில் ரசிகர்களின் இந்த முழக்கங்கள், ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவீன் பிட்டர்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு முறையும் டாஸ் போட வரும்போதும், பேட்டிங் செய்ய வரும்போதும் அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பது போல தன்னைக்காட்டி கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. வருத்தத்தில் உள்ளார். ரசிகர்கள் அவருக்கு எதிராக முழக்கமிடுவது போன்ற விஷயங்கள் ஹர்திக் பாண்டியாவை மிகவும் பாதித்துள்ளது.

மேலும் அது அவரது ஆட்டத்தையும், கேப்டன்சியையும் பாதித்துள்ளது. நானும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்துள்ளேன். அவர் இப்படி நடத்தப்படுவதை விரும்பவில்லை. இதுபோன்ற விஷயங்கள் ஹர்திக் பாண்டியா மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், இதுபோன்று பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை