SA vs IND: ரிஷப் பந்திற்கு கொஞ்சம் பிரேக் தேவை - மதன் லால்
இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆரம்பத்திலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அபாரமாக விளையாடி ரிஷப் பந்த் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை வென்றபோது முக்கிய பங்காற்றினார் ரிஷப் பந்த்.
இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள ரிஷப் பந்த், தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அவரது அதிரடியான பேட்டிங் தான் அவரது பலம். ஆனால் அதுவே அவரது பலவீனமாகவும் மாறியுள்ளது.
ஏனெனில் சில சமயங்களில் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது அணியின் சூழலை கருத்தில்கொண்டு ஆடுவதா என்று தெரியாமல் இரட்டை மனநிலையில் விளையாடி அவுட்டாகிவிடுகிறார்.
ரிஷப் பந்த் அவரது கடைசி 13 இன்னிங்ஸ்களில் வெறும் 250 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் மோசமாக விளையாடி வருகிறார். குறிப்பாக வாண்டெர் டசனின் ஸ்லெட்ஜிங்கிற்கு ரியாக்ட் செய்ய நினைத்து ரிஷப் டக் அவுட்டானது அனைவருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கவாஸ்கர், கம்பீர் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப்பை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர் மதன் லால், “ரிஷப் பந்திற்கு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும். சஹா மாதிரியான சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இருக்கும்போது, ரிஷப் சொதப்ப சொதப்ப பார்த்து கொண்டிருக்கக்கூடாது.
ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ஆட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். எனவே இதுதொடர்பாக சிந்திக்க ஏதுவாக அவருக்கு ஒரு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும். அவர் மேட்ச் வின்னர் தான். ஆனால் அதற்காக இவ்வளவு மோசமாக பேட்டிங் ஆடக்கூடாது. தனக்காக பேட்டிங் ஆடக்கூடாது; அணிக்காக ஆடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.