உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் இவர் தான் - பிரெட் லீ கணிப்பு!

Updated: Tue, Dec 27 2022 11:21 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடருக்குப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் ஒரு அணியைக் கட்டமைப்பதில் பலவிதமான பரிசோதனை முயற்சிகள் செய்தார்கள். ஆனால் உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பரிதாபமாக படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது.

இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்காக உலகில் உள்ள முன்னணி அணிகள் எல்லாமே ஆயத்த வேலைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணிகளும் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர் இடத்திலும் மற்றும் விக்கெட் கீப்பர் இடத்திலும் மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த இடங்களுக்கான போட்டிதான் தற்போது நடந்து வருகிறது.

இந்த இரண்டு இடங்களுக்கும் சேர்த்து ஒரே வீரர் மிகப் பொருத்தமாக இருக்கிறார். அவர் இசான் கிஷான். இந்தக் காரணத்தால் அவர் மீது இந்திய அணி நிர்வாகத்தின் பார்வை பெரிய அளவில் இருக்கிறது. மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் அவர் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிவேக இரட்டை சதத்தை அடித்து இருந்தார்.

இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் தான் இடம்பெறுவார் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ கணித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அதிவேக இரட்ட சதத்தை அடித்ததின் மூலம் உள்நாட்டில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான தொடக்க வீரர் இடத்திற்கு தன் பெயரை அழுத்தமாகப் பரிந்துரை செய்திருக்கிறார் இசான் கிஷான். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது நடக்க வேண்டுமா என்றால் கட்டாயம் நடக்க வேண்டும். 

அவர் ஆட்டத்தில் நிலைத்தன்மையைக் காட்ட முடிந்து உடற் தகுதியோடு தொடர்ந்து இருந்தால், அவர்தான் வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கான துவக்க வீரராக இருக்க வேண்டும். அவர் அடித்த தனது இரட்டை சதத்தை அதைவிட வேகமாக மறந்து விட வேண்டும். இந்தப் புகழ்ச்சிகள் எல்லாம் ஒரு மாதிரி சிலந்தி வலையில் சிக்க வைக்கக் கூடியது. அவருக்கு என் அறிவுரை என்னவென்றால், இரட்டை சத மைல்கல்லை மறந்து விடுங்கள், சாதிக்க மிகப்பெரிய மைல்கல்கள் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை