பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள்!
ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரி 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 25 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
அதேசமயம் இந்த புள்ளிப்பட்டியலில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை மட்டுமே பெற்றும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். மேற்கொண்டு மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியானது 6 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று 7ஆம் இடத்திலும் உள்ளது. இதனால் இந்த சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான பிக் பேஷ் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். அதன்படி இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடிய டிராவிஸ் ஹெட், மற்றும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நடப்பு சீசன் பிக் பேஷ் லீக் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதன் காரணமாக டிராவிஸ் ஹெட், ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, உஸ்மான் கவாஜா ஆகியோர் இத்தொடரில் பங்கேற்றாலும் அவர்களுக்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு அலெக்ஸ் கேரி, சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மிட்செல் மார்ஷ், மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் பிபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கு 16 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.