தொற்றிலிருந்து குணமடைந்த டிராவிஸ் ஹெட்; மேலும் இருவருக்கு கரோனா உறுதி!

Updated: Wed, Jan 24 2024 13:11 IST
தொற்றிலிருந்து குணமடைந்த டிராவிஸ் ஹெட்; மேலும் இருவருக்கு கரோனா உறுதி! (Image Source: Google)

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்கவுள்ளது. 

முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் சில நெறிமுறைகளைப் பின்பற்றி தனது பயிற்சிக்கு திரும்பியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் சமீபத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில் டிராவிஸ் ஹெட் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம், மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் க்ரீன் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருக்கு இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“டிராவிஸ் ஹெட்டிற்கு நேற்று மற்றும் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் எந்த தடையும் இன்றி நாளைய போட்டியில் பங்கேற்பார். அதேசமயம் கேமரூன் க்ரீன் மற்றும் அணியில் தலைமை பயிற்சியாளர் அண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

அவர்கள் இருவரும் தொற்றிலிருந்து விடுபடும் வரை அணியிலிருந்து தனிமைப்படுத்தபட உள்ளனர். இருப்பினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நெறிமுறைகள் படி கேமரூன் க்ரீன் போட்டியில் பங்கேற்பதையோ, ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அணியில் இருப்பதையோ இது பாதிப்பை ஏற்படுத்தது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது சக வீரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை