இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஹீதர் நைட்!
இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன் ஆஷஸ் தொடரையும் இழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி மீது விமர்சனங்களும் அதிகரித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் லூயிஸ் விலகுவதாக இன்றைய தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக கிட்டத்திட்ட 9ஆண்டுகளாக வழிநடத்தி வந்த ஹீதர் நைட்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஹீதர் நைட், 199 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார். இதில் அவர் 134 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார். இதுதவிர்த்து 6 உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும், அதில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் அவரது தலைமையில் இங்கிலாந்தின் செயல்திறன் ஏமாற்றமளித்தது. இதன் காரணமாகவே அவர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக புதிய கேப்டனை நியமிக்கும் பணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசிய ஹீதர் நைட், "கடந்த 9 ஆண்டுகளாக என் நாட்டை வழிநடத்தியது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை. மேலும் எனது பதவிக்காலத்தை மிகுந்த பெருமையுடன் நினைவு கூர்வேன். அணியை வழிநடத்தும் சவாலை நான் விரும்புகிறேன், ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்து தான் ஆகவேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் நான் இப்போது அணிக்குத் திரும்பிச் சென்று அணியின் சிறந்த பேட்டர் மற்றும் சக வீரராக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. 2017 ஆம் ஆண்டு லார்ட்ஸில் சொந்த மைதானத்தில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை எனாது தலைமையில் வென்றது எப்போதுமே ஒரு பெரிய சிறப்பம்சமாக இருக்கும். என்னுடைய ஏற்ற தாழ்வுகளில் என்னையும் அணியையும் ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.