டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் & பவுலர் இவர்கள் தான் - ஹென்ரிச் கிளாசென்!
இந்திய அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்று தொடரை சமன்செய்துள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இந்த மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென், டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் மற்றும் தான் எதிர்கொள்ள கடினமாக இருந்த பந்துவீச்சாளர் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கிளாசென், “தென் ஆப்பிரிக்க அணியின் புகழ்பெற்ற பேட்டர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இருவரும் மைதானத்தின் பின்புறம் விளையாடுவதில் தனித்துவமானவர்கள். அவர்களால் நேராக வரும் பந்துகளை கூட பைன் லெக் திசையில் அடிக்க முடியும். அது நம்பமுடியாத ஒன்றாகும். அதிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடும் சுப்லா ஷாட்டும் அபாரமானது.
அவர்கள் இருவரும் விளையாடும் விதத்தில் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். நான் அப்படியான ஷாட்டை விளையாடியது இல்லை. அதனால் தற்போது டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ் தான். அதேநேரத்தில் தற்சமயம் டி20 கிரிக்கெட்டில் எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றால் அது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
சம கால கிரிக்கெட்டில் டி20 போறுத்தவரையில் மிகவும் அபாத்தான வீரர்கள் பட்டியலில் ஹென்ரிச் கிளாசென் தனி இடத்தைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 54 போட்டிகளில் விளையாடியுள்ள கிளாசென், 5 அரைசதங்களுடன் 939 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இரு சதம் 6 அரைசதங்கள் என 993 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.