SA20 League 2nd SF: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; ஜேஎஸ்கேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், 2ஆவது அரையிறுதி போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதின.
செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஸிங்டன் (6) மற்றும் டெம்பா பவுமா(0) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர்.
அதன்பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு மார்க்ரமும் ஹெர்மானும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 99 ரன்களை குவித்தனர். ஹெர்மான் 48 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக பேட்டிங் ஆடிய மார்க்ரம் சதமடித்தார். 58 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்தார் மார்க்ரம். அவரது அபாரமான சதத்தால் 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 213 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 214 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டூ பிளெசிஸ்(0), ப்ளூய்(0) ஆகிய இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதன்பின் வந்த கோட்ஸீ 12 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடியாக விளையாடிய ரீஸா ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் அடித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
இதில் 54 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் அடித்து வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனாலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எதிர்கொள்கிறது.