மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை வம்பிழுக்கு ராசிகர்கள்!

Updated: Thu, May 25 2023 13:11 IST
Here’s how fans reacted to Lucknow's viral tweet after the eliminator match against Mumbai! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்த லக்னோவை 4ஆவது இடம் பிடித்த மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. இதன்மூலம் நாளை நடைபெறும்  குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. சென்னையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை கேமரூன் கிரீன் 41 (23) சூரியகுமார் யாதவ் 33 (2)) என முக்கிய வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 182/8 ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை துரத்திய லக்னோ சவாலான சேப்பாக்கம் மைதானத்தில் நெருப்பாக பந்து வீசிய மும்பைக்கு பதில் சொல்ல முடியாமல் 16.3 ஓவரில் 101 ரன்களுக்கு சுருண்டு இத்தொடரிலிருந்து வெளியேறியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் மே 1ஆம் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோவுக்காக விளையாடும் ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் பயிற்சியாளராக விராட் கோலி நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு கௌதம் கம்பீர் சண்டை போட்டது பெரிய சர்ச்சையாக மாறியது. அதை விட லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் செய்த சமாதானத்தால் பகையை மறந்து கை கொடுக்க வந்த விராட் கோலியிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்று நவீன் திமிராக சென்றது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அந்த நிலையில் லக்னோவுக்கு எதிராக குஜராத் வென்ற போது ரஷித் கான், சஹா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டினார்.

அதை தாங்க முடியாத நவீன் மும்பைக்கு எதிராக பெங்களூரு தோல்வியை சந்தித்த போது அதை மாம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டே மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தார். இப்படி நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் நாயகனாக ஜொலித்து வரும் விராட் கோலியை சமூக வலைதளங்களில் வம்பிழுத்த அவர்களை விடாத இந்திய ரசிகர்கள் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் “கோலி கோலி” என கூச்சலிட்டு பதிலடி கொடுத்தனர்.

மேலும் கொல்கத்தாவிலும் அதே போல் தாம் பந்து வீசிய போது விராட் கோலியின் பெயரை உச்சரித்து கடுப்பேற்றிய ரசிகர்களை வாய் மீது கை வைத்து அமைதியாகவும் இருக்குமாறு நவீன் மிரட்டினார். அதற்கு ஒரே ஓவரில் 20 ரன்களை விளாசிய ரிங்கு சிங் 110 மீட்டர் மெகா சிக்சர் அடித்து பதிலடி கொடுத்ததை விராட் கோலிக்காக ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அவை அனைத்தையும் விட ஆணவத்தின் உச்சகட்டமாக குஜராத்துக்கு எதிராக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய போது பிரபல ஆப்பிரிக்கன் பத்திரிக்கையாளர் அடக்க முடியாமல் சிரிக்கும் காணொளியை பதிவிட்ட நவீன் பெங்களூருவின் தோல்வியை வெறித்தனமாக சிரித்துக் கொண்டாடியது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்து வெளியேறியதால் மும்பை வீரர்கள் சந்திப் வாரியர், குமார் கார்த்திகேயா, விஷ்ணு வினோத் ஆகியோர் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து “இனி வாழ்க்கையில் மாம்பழத்தை பார்க்க மாட்டேன், சாப்பிட மாட்டேன், பெயரைக் கூட கேட்க மாட்டேன்” என்ற வகையில் அமைதியாக இருக்கும் வழியை பாருங்கள் என நவீனுக்கு தக்க பதிலடி கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

 

ஆனால் சில நேரங்கள் கழித்து அவர்கள் அதை டெலிட் செய்தாலும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ரசிகர்கள் அவரையும் லக்னோ அணியையும் கலாய்த்து தள்ளினர். அதனால் ஏற்பட்ட தொல்லையை தாங்க முடியாத லக்னோ நிர்வாகம் தனது ட்விட்டரில் மாம்பழம் சம்பந்தமான அனைத்து வார்த்தைகளையும் செட்டிங்கில் மியூட் செய்தது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸோமாட்டோ நிறுவங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மாம்பழம் குறித்த பதிவுகளை பதிவிட்டது. இந்நிலையில் இப்பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை