INDW vs SAW, 2nd ODI: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான சாதனை!

Updated: Thu, Jun 20 2024 08:46 IST
INDW vs SAW, 2nd ODI: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான சாதனை! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரது அதிரடியான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 325 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 18 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 103 ரன்களையும் சேர்த்து அசத்தினர். 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும், கேப்டன் லாரா வோல்வார்ட் - மரிஸான் கேப் இணை அபாரமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் மரிஸான் கேப் 114 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை போராடிய லாரா வோல்வார்ட் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 135 ரன்களைச் சேர்த்திருந்தார்.

இருப்பினும் மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்டநாயகியாக ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், லாரா வோல்வார்ட் மற்றும் மரிஸான் கேப் என நான்கு வீராங்கனைகள் சதமடித்து அசத்தியதன் மூலம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே போட்டியில் நான்கு வீராங்கனைகள் சதமடித்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் இப்போட்டியானது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்குமுன் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் டாமி பியூமண்ட்(101), சாரா டெய்லர் (118) மற்றும் தென் ஆப்பிரிக்க வீராங்கனை லீசெல் லீ (117) என மூன்று விரானங்கனைகள் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது நேற்றை போட்டியின் மூலம் இந்தியா - தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் முறியடித்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை