பிபிஎல் 2023: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Wed, Jan 25 2023 14:38 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக மகாலிஸ்டர் ரைட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 56 பந்துகளில் 56 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அவரைத் தவிற நட்சத்திர வீரர்களான கலெப் ஜெவெல், ஸாக் கிரௌலி, பென் மெக்டர்மோட், டிம் டேவிட், மேத்யூ வேட் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் கேப்டன் உஸ்மான் கவாஜா 10 ரன்களிலும், ஜோஸ் பிரௌன் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர்களான மார்னஸ் லபுசாக்னே, மேட் ரென்ஷா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த சாம் ஹைன் - ஜிம்மி பெர்சன் ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 26 ரன்களில் ஹைனும், 39 ரன்களில் பெர்சனும் விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 20 ஓவர்களில் பிரிஸ்பேன் ஹீட் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹாபர்ட் அணி தரப்பில் நாதன் எல்லிஸ், ஃபஹீம் அஷ்ரஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை