பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் நான் அவரை விட சிறந்தவன் - குவேனா மபகா!
அண்டர் 19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தங்களது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜூவல் ஆண்ட்ரூ 130 ரன்களை அடித்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 254 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குவேனா மபகா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் முடிந்த பேசிய அவர், “உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நான் என் சகோதரரிடம் விக்கெட்டுகளை கைப்பற்றிய பின் எவ்வாறு கொண்டாடுவது என கேட்டேன். அதற்கு அவர் எனக்கு தெரியாது என்று கூறினார். பிறகு எனக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளரான பும்ராவை பின் பற்ற முடிவு செய்தேன். அவரை பொறுத்தவரையில் விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அதனை பெரிதாக கொண்டாடமாட்டார்.
எனவே, பும்ராவை நாம் பின்பற்றுவோம் என்று நான் அவரை பின்பற்றி வருகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். ஆனால் நான் பும்ராவை விட பந்துவீச்சில் சிறந்தவன் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார். இந்நிலையில் இவரது கருத்து சமூக வலைதளக்களில் பேசுபொருளாக மாறியுள்ளாது.