இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - முகமது ரிஸ்வான்!

Updated: Fri, Nov 08 2024 21:48 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள ஓவால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிலும் குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை.  நட்சத்திர வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியதால், ஆஸ்திரேலிய அணியானது 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்ததுடன் முதல் விக்கெட்டிற்கே 130 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான், “இந்த வெற்றி கொடுத்துள்ள நம்பிக்கையை அடுத்த போட்டிக்கும் முன்னெடுத்துச் செல்வோம் என்று நம்புகிறோம். வெற்றி எப்போதும் ஒரு வெற்றிதான். டாஸ் வென்ற பிறகு பந்து வீச முடிவு செய்தோம். அந்தவகையில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதையும் நாங்கள் கண்டோம். ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சை அனைவரும் ரசிக்கிறார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து அவர் இவ்வாறு பந்துவீசுவதை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::