தோனி கூறிய அறிவுரை எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது - ஷிவம் தூபே!

Updated: Tue, Aug 01 2023 20:57 IST
தோனி கூறிய அறிவுரை எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது - ஷிவம் தூபே! (Image Source: Google)

இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக சமீபக் காலத்தில் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா சில ஆண்டுகளுக்கு முன்பு காயமடைய, அவரது இடத்தில் மும்பை வீரரான வலது கை மிதவேகப்பந்துவீச்சாளர் இடதுகை பேட்ஸ்மேன் ஷிவம் துபே 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். மேலும் ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.

அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் எவ்வளவு சீக்கிரம் இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடருக்கும் வந்தாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவரது வீழ்ச்சியும் அமைந்திருந்தது. இந்த நேரத்தில்தான் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் போட்டியிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷிவம் துபேவை நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கியது.

அந்த இடத்திலிருந்து இவரது கிரிக்கெட் வாழ்க்கை வேறொரு இடத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, தற்பொழுது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறும் அளவுக்கு வந்திருக்கிறது. ஷிவம் துபே பெரிதாக கால்களை பயன்படுத்தி விளையாட மாட்டார். தன்னுடைய உயரத்தை ரீச்சை பயன்படுத்தி நின்ற இடத்தில் இருந்து பந்தை பலம் கொண்டு அடிக்கக்கூடிய வீரராகவே இருந்தார்.

இவர் இதை மெருகேற்றிக் கொள்ளவும் இல்லை, அதே சமயத்தில் இவரிடம் இருந்த இந்த திறமையை எந்த அணி நிர்வாகமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் வந்து மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் விளையாட ஆரம்பித்ததும், இவரது பலவீனமாக பார்க்கப்பட்ட விஷயங்களை களத்தில் பலமாக மாறியது.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இவரை சிறப்பு அஸ்திரமாக மகேந்திர சிங் தோனி பயன்படுத்தி வெற்றியடைந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிவம் துபே மிடில் வரிசையில் வந்து 418 ரன்கள் எடுத்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 160. மேலும் இவர் 35 சிக்ஸர்கள் விளாசினார். தற்போது இந்திய அணியில் இடம் பெறுவதற்கு மகேந்திர சிங் தோனி எவ்வளவு உதவியாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தோனி எப்படி எல்லாம் எனக்கு உதவி இருக்கிறார் என்று என்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. நான் என் ஆட்டத்தை மேம்படுத்தினேன். ஆட்டத்தை எப்படி முடிப்பது? ஒவ்வொரு சூழ்நிலைக்கு எப்படி இருப்பது? பந்துவீச்சாளர்களை எப்படி எல்லாம் சமாளிப்பது? என்பது குறித்தெல்லாம் நான் தெரிந்து கொண்டேன். மேலும் பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அவற்றை வெளிப்படுத்த முடியாது.

ஆனால் எனக்கு கண்டிப்பாக சில பெரிய குறிப்புகள் அவரிடம் இருந்து கிடைத்தது. கடைசி வரை விளையாடி ஆட்டத்தை முடிக்க வேண்டியது முக்கியம் என்று அவர் எனக்கு புரிய வைத்தார். உங்கள் பேட்டிங்கில் இருந்து நீங்கள் போட்டியை வெல்ல முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள் என்று என்னை நம்ப வைத்தார். தோனி எனக்கு சிந்தனை தெளிவை கொடுத்தார். அணியில் என்னுடைய பங்கு என்னவென்று கூறினார்.

அது மிகவும் எளிமையானது. என்னவென்றால் நான் வேகமாக விளையாடி ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும், அதே சமயத்தில் நான் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தாலும் அது பிரச்சனை கிடையாது. அதனால் முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். எனக்கு கொடுக்கப்பட்ட வேலை இவ்வளவு சுருக்கமாக தெளிவாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை