எனக்கு ஸ்கைன்னு பெயர் வைத்தது கம்பீர் தான் - சூர்யகுமார் யாதவ்!
டி20 கிரிக்கெட்டில் இன்று ‘ஸ்கை (Sky)’ என்று அழைக்கப்படும் சூரியகுமார் யாதவை தெரியாதவர்களே கிடையாது. நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு 34 டி20 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 1200 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு சதங்கள் 9 அரைசதங்கள் அடங்கும். அத்துடன் நிற்கவில்லை. சற்று மோசமான ஃபார்மில் ஐபிஎல் போட்டிக்கு வந்தாலும் இரண்டாம் பாதியில் அப்படியே ஃபார்மிற்கு திரும்பி மற்றும் 16 போட்டிகளில் 605 ரன்கள் விளாசினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு ஸ்கை முக்கிய பங்காற்றினார். டி20 கிரிக்கெட் இவ்வளவு பிரபலமாக இருக்கும் ஸ்கை தற்போது லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சி செய்து வருகிறார். அப்போது அளித்த பேட்டியில், தனக்கு ஸ்கை என்ற பெயர் எப்படி வந்தது? என்பது பற்றி பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு ஸ்கை என்று பெயர் வைத்தது கௌதம் கம்பீர் தான். 2014-15 சீசனில் என்று நினைக்கிறேன். நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தபோது, அப்போது கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் எனது பெயரை அழைப்பதற்கு மிகவும் பெரிதாக இருக்கிறது என்றார். சுருக்கமாக இனி ஸ்கை என்று வைத்துக்கொள்கிறேன். இனி அப்படியே அழைக்கிறேன் என்றார். அது மும்பை இந்தியன்ஸ் அணியிலும் தொடர்கிறது. உள்ளூர் போட்டிகள் தாண்டி இப்போது சர்வதேச அளவிலும் அப்படி அழைக்கப்பட்டு வருகிறது” என்றார்.