இந்த தோல்வி குறித்து நான் ஏதும் சாக்கு சொல்ல விரும்பவில்லை - ஷான் மசூத்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 565 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.
இதன் காரணமாக வங்கதேச அணிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 6.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத், “இந்த தோல்வி குறித்து நான் ஏதும் சாக்கு சொல்ல விரும்பவில்லை. இந்த ஆடுகளத்தில் நாங்கள் நினைத்தபடி விளையாடவில்லை. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்த வானிலை, முதல் நாள் ஆட்டத்திற்கு 8-9 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது.முதலில் ஆடுகளத்தைப் பார்க்கும்போது, இங்கு வேகம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.
அதனால் நாங்கள் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடிவுசெய்தோம். ஆனால் போட்டியின் முடிவில் நாங்கள் தவறு செய்துள்ளதை புரிந்துகொண்டோம். அவர்களை பின் தங்க வைப்பதற்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எவும் பலனளிக்கவில்லை. அதுமட்டுமின்றி நாங்கள் களத்திலும், பந்துவீச்சிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் இது ஒரு தவறான கருத்து என்று நான் நினைக்கிறேன்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஏனெனில் நாம் டிராவில் முடிவும் ஒரு போட்டியில் விளையாடும்போது, களத்தில் நீங்கள் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்கலாம். மேலும் போட்டி அழுத்தமாகும் சூழலில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்போட்டியில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால் அடுத்து போட்டியில் இந்த தவறுகளை திருத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். எங்கள் சொந்த நிலைமைகளில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான மிகப்பெரிய பாடம் இது” என்று தெரிவித்துள்ளார்.