நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களை அடிப்பேன் - நிதிஷ் ரானா!

Updated: Fri, Mar 22 2024 14:53 IST
நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களை அடிப்பேன் - நிதிஷ் ரானா! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் உலகின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களும் இணைந்து விளையாடவுள்ளதால் இத்தொடரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதுபோக நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரும் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. 

இதன் காரணமாக இந்திய அணி வீரர்களை ஐபிஎல் செயல்பாடுகளை கருத்துக்கொண்டு தேர்வு செய்யவுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய இளம் வீரர்களும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாக முயற்சி செய்வார்கள் என்பது இத்தொடரின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. 

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடிப்பேன் என்றும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே லட்சியம் என்றும் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் முழு உடற்தகுதியுடனும் உள்ளார். 

இருப்பினும் ஒருவேளை கேகேஆர் அணியை மீண்டும் வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால், அதனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் வரவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக என்னால் 600 ரன்களுக்கு மேல் எடுக்க முடியும் என்றல், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்விலும் நான் நிச்சயம் இருப்பேன் என்று தெரியும். அதற்காக உழைத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் நிதிஷ் ரானா இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 18 அரைசதங்களுடன் 2,594 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் கடந்த சீசனில் காயம் காரணமாக கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியதையடுத்து, அவருக்கு மாற்றாக கடந்த சீசனில் கேகேஅர் அணியை நிதிஷ் ராணா வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேகேஆர் அணி: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பில் சால்ட், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, கேஎஸ் பாரத், சேத்தன் சகாரியா, மிட்செல் ஸ்டார்க், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மணீஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், துஷ்மந்த சமீரா, சாகிப் ஹுசைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை