என்னால் தூங்க முடியவில்லை - மோஹித் சர்மா!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மோஹித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5ஆவது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்கள் விளாசியது சென்னையின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தது.
இந்நிலையில், தோல்வி பேசிய மோஹித் சர்மா,"நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது. வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன்.
கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன். என்னால் தூங்க முடியவில்லை.
நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை. எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.