அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள் - கோலி, ரோஹித் குறித்து சூர்யகுமார் யாதவ்!

Updated: Mon, Dec 26 2022 20:36 IST
Image Source: Google

இந்திய அணியில் தற்போது தவிர்க்கவே முடியாது, என்ன ஆனாலும் அவர் ஆடியே தீர வேண்டும் என்ற பெருமையை பெற்றிருப்பவர் சூர்யகுமார் யாதவ். டி20 கிரிக்கெட்களில் இந்தாண்டு அவர் காட்டிய அதிரடி ஏராளம். டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர், நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சதம் என அடுத்தடுத்து அதிரடி காட்டுவதால் இந்தியாவின் 360 டிகிரி என்றே அவருக்கு பெயர் உறுதியாகிவிட்டது.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரே தற்போது 3 பேரை சுற்றியுள்ளது என்பது போல மாறியுள்ளது. ஓப்பனிங்கில் ரோஹித் அடித்துவிட்டால், மிடில் ஆர்டரில் விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் மளமளவென் ரன்களை உயர்த்திவிடுகிறது. இதனால் அடுத்தமுறையாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரோஹித் மற்று விராட் கோலி போன்றோருடன் ஓய்வறையை பகிர்ந்துக்கொள்வதில் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள். அவர்கள் சாதித்த விஷயங்களை நான் நெருங்குவேனா என்பது கூட எனக்கு தெரியாது.

சமீப நாட்களாக விராட் கோலியுடன் எனக்கு சில நல்ல பார்ட்னர்ஷிப்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா எனக்கு பெரிய சகோதரன் போன்றவர். எனக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், நேரடியாக ரோகித்திடம் கேள்வி கேட்பேன். மும்பை அணியில் இருந்தது முதலே எனக்கு நிறைய அறிவுரைகளை கூறியிருக்கிறார்.

என்னுடைய உயர்வுக்கு முதலில் மும்பை அணி காரணம் எனக்கூறலாம். 2018ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்து வந்தபோது, டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்காதா என ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் நான் கேட்காமலேயே அணி நிர்வாகம், எனக்கு டாப் ஆர்டரில் ஆடும் வாய்ப்பை கொடுத்தது. எனக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொடுத்து தூக்கிவிட்டது” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை