IND vs SL: பேட்டிங் செய்யும் போது பயமாக இருந்தது - ஸ்ரேயாஸ் ஐயர்
இலங்கை அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் இந்திய அணி வீரர்கள் தடுமாற, ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் விளசினார்.
இதில் 10 பவுண்டரிகளும் , 4 சிக்சர்கள் அடங்கும். ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம் மூலம் இந்தியா கௌரவமான இலக்கை எட்டியது.
முதலில் பந்து நன்றாக திரும்பியதால் அனைத்து வீரர்களுமே திணறினர். பின்னர் சுழற்பந்துவீச்சாளர்களை நெருக்கடி தரும் விதமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். பந்து திரும்புவதற்குள் இறங்கி வந்து அடிப்பது , பந்து திரும்புவதற்கு நேரம் தராமல் பேட்டை விளாசி ரன் சேர்ப்பது என புதிய யுத்தியை ஸ்ரேயாஸ் ஐயர் கடைபிடித்தார்.
சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இறங்கி வந்து அடிப்பதற்குள் பந்தை மிஸ் செய்ய, விக்கெட் கீப்பர் ஸ்டம்ப் அவுட் செய்தார். இதனிடையே போட்டிக்கு பிறகு பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “பேட்டிங் செய்யும் போது முதல் 5 ஓவர் மிகவும் பயந்தேன். பந்தை எதிர்கொள்ளவே பதற்றமாக இருந்தது. பின்னர் எப்படி விளையாடுவது, எப்படி ரன் சேர்ப்பது என பயிற்சியாளரிடம் கேட்டேன். அவர் சில யுத்திகளை கூறினார். அந்த யுத்திகளை அப்படியே களத்தில் வெளிப்படுத்தினேன். இது மகிழ்ச்சியை அளித்தது” என்று தெரிவித்தார்.