என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Fri, Aug 18 2023 12:52 IST
என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது - ஜஸ்ப்ரித் பும்ரா! (Image Source: Google)

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டியில்  விளையாட உள்ளது. இதில் அண்மையில் நடந்து முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 11 மாதங்களாக காயத்தால் ஓய்வில் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்றைய போட்டியின் மூலம் கேப்டனாக மீண்டும் களமிறங்குகிறார். இதனிடையே நேற்று நடைபெற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,“நான் ஒய்வில் இருந்த போது டி20 போட்டியைக் காட்டிலும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கே என்னை தயார்படுத்தி கொண்டிருந்தேன்.

உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தான் 10 ஓவர், 12 ஓவர் மற்றும் 15 ஓவர்கள் என தொடர்ந்து வீசினேன். பயிற்சியின் போது அதிக ஓவர் வீசிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் எங்கிருந்து விட்டேனோ அங்கிருந்து தொடங்க ஆசைப்படுகிறேன். அதற்காக கடுமையாக நான் என்னுடைய உழைப்பை போட்டிருக்கிறேன்.

எப்போதெல்லாம் நாம் மனதளவில் சோர்வாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். என் மீது உள்ள எதிர்பார்ப்பு குறித்து எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. என்னுடைய குறிக்கோள் இனி நான் விளையாடும் போட்டிகளை மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். ஏனென்றால் நான் நீண்ட ஒரு ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை நான் மீண்டும் உணர வேண்டும்.

11 மாதத்திற்கு முன்பு நீங்கள் எப்படி பார்த்தீர்களோ, அதே போன்ற பும்ராவாகத் தான் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட் களத்திற்கு திரும்பியதை நான் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். இப்போது உடல் அளவிலும் நான் சரியாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தால் அவதிப்பட்டபோது கொஞ்சம் எரிச்சலாக தான் இருக்கும். நம் மீது நமக்கு சந்தேகங்கள் வருவதற்கு பதில் எப்படி உடல் தகுதியை மீட்க வேண்டும். எப்படி மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது குறித்து நான் யோசித்தேன். 

என் உடலை நான் மதித்து அது காயத்தில் இருந்து குணம் அடைய சிறிது நேரம் கொடுத்தேன். என்னுடைய இருண்ட காலமாக நான் இதனை நினைக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்றும் நான் பயப்படவில்லை.நான் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தினேன். இந்த ஓய்வு காலத்தில் எனது நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட்டேன். அதேநேரம் ஓய்வில் இருந்த சமயத்தில் கிரிக்கெட்டை மிஸ் பண்ணினேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை