ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் - ஆடம் ஸாம்பா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அறியபடுபவர் ஆடம் ஸாம்பா. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 99 ஒருநாள் போட்டிகளிலும் 87 டி20 போட்டிகளிலும் விளையாடி 274 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்ட இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் ஆடம் ஸாம்பா அங்கம் வகித்தார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அளவில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஸாம்பா, இதுநாள் வரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட எனக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று ஆடம் ஸாம்பா கூறியுள்ளது தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள் ஸாம்பா, “ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். நான் தற்போது ஷீல்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறேன். அங்கு நான் பந்துவீசு விதம் எனக்கான வாய்ப்பை தேடிக்கொடுக்கும் என நம்புகிறேன். மேற்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவது எனக்கு நம்பிக்கையளிக்கிறது.
அதனால் எதிர்வரும் துணைகண்ட சுற்றுப்பயணங்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் நான் இடம்பிடித்தாலும், மக்கள் எனது சராசரி குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் கூறுவதுபோல் என்னுடைய சராசரியும் சரியாக இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனாலும் என்னால் சிறப்பாக பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை உள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆஸ்திரேலிய அணியானது இந்தாண்டு இறுதியில் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி விளையாடவுள்ளது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பா இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.